|
|
|
தமிழகமே! உணர்வுகள் பொங்க
அன்புத் தமிழகமே!
தமிழீழத்தமிழ்மகனின்
பொங்கல்வாழ்த்துக்கள்
எங்கள் வயல்களில்
நெல்கள் விதைக்கப்படுவதில்லை
செல்கள் விதைக்கப்படுவதால்
மனிதர்கள்
சதைப்பிண்டங்களாய்
அறுவடைசெய்யப்படுகின்றனர்
மரணங்கள் மலிந்த பூமியிது
சமாதானம் கூட எதிரியால்
சாகடிக்கப்பட்டுவிட்டது
எஞ்சியிருந்த யுத்தநிறுத்தமும்
சிங்களத்தால்
சிதைக்கப்பட்டுள்ளது
சிறிலங்காவில்
கருவில் உள்ளகுழந்தைமுதல்
அரசியல் தலைவர்கள்வரை
தமிழர்களாய் இருந்தால்
கொல்லப்படுவர்
காணாமல்போவர்
இன்று தைப்பொங்கல்
இன்றும் கூட பலதமிழர்
இறந்துபோகலாம்!
மனிதவுரிமை
மதிக்கப்படுவதில்லை
புத்தமதவுரிமை மட்டுமே
யுத்த தர்மமாக்கப்பட்டுள்ளது
வங்கக்கடல்
பிரித்ததனால்
எங்கள்
தொப்புள்கொடி உறவு
அறுந்திடுமா
வேர்கள் நீங்கள்
விழுதாக தாங்கவேண்டியவர்கள் - நாம்
வெட்டி வீழ்த்தப்படும்போது
எட்டிநின்று பார்க்கலாமா
முல்லைக்கொடி படர
தேர்கொடுத்ததேசம்
தமிழீழத்தமிழர் வாழ
குரலாவது கொடுக்கலாமே!
துடுப்பாட்டத்தில் உங்கள்
சுப்பர்மேன்கள்
அவுட்டாக்கப்பட்டனர்
நடுவர்கள் தவறு
கொதித்தெழுந்தீர்கள்
பாரதமே குலுங்கியது
எம்மக்கள்
ரண் எண்ணிக்கையில்
கொல்லப்படுகின்றனர்
தமிழகமீனவரும்
சாகடிக்கப்படுகின்றனர்
சிங்களத்திற்கெதிராக
நீங்கள் ஏன் சீறியெழவில்லை
இம்முறையாவது
உங்கள் பொங்கல்
புதுமைப்பொங்கலாகட்டும்
உரிமைக்குரல் முழங்கட்டும்
உள்ளங்கள் பொங்கட்டும்
இன்றுமட்டுமல்ல
என்றென்றும்
பொங்கட்டும் உங்கள் உணர்வுகள்!
எங்களுக்காய்
பொங்கட்டும் உங்கள் கோபம்!
சிங்களத்திற்கெதிராய் பொங்கட்டும்!
தமிழீழத்தமிழரின் வாழ்வுக்காய்
பொங்குதமிழாய்
பொங்கட்டும் தமிழகம்!
வாழ்க தமிழ்!
வாழ்க தமிழ்!
|
|
|